Vedic Jothidam

ஞாயிறு, 25 செப்டம்பர், 2016

வான மண்டலத்தைப் பிரிக்கும் விசாகம்


நட்சத்திர அதிசயங்கள்
வான மண்டலத்தை இரு பிரிவுகளாகப் பிரிக்கும் விசாகம் ஒரு அபூர்வமான அதிசய நட்சத்திரம்! எல்லை இல்லாத அதன் பெருமைகளில் சிலவற்றைப் பார்ப்போம்!







விசாகம் என்றால் புதிய பிரிவு
 மனித குலத்திற்கே முக்கியமான நட்சத்திரமாகத் திகழும் விசாக நட்சத்திரம் பல அதிசயங்களையும் அபூர்வ உண்மைகளையும் நம்மை அறியச் செய்து பரவசமூட்டும் நட்சத்திரம். 27 நட்சத்திரங்களில் 16வது நட்சத்திரமாக அமையும் இது துலா ராசியில் அமைந்துள்ளது.இந்த நட்சத்திரத்திற்கு ராதா என்ற இன்னொரு பெயரும் உண்டு. ஆகவே தான் இதைத் தொடர்ந்து அடுத்து வரும் நட்சத்திரத்தை ராதாவைத் தொடர்ந்து வருவது என்ற பொருளுடைய அனுராதா (அல்லது அனுஷம்) என்ற பெயரால் அழைக்கிறோம். விசாகம் என்ற சொல்லை வி+ சாகம் என்று இரண்டாகப் பிரித்துப் பொருளைக் கொள்ள வேண்டும். ‘வி’ என்றால் புதிய அல்லது வேறு என்று பொருள் ஆகும். ‘சாகம்’ என்றால் பிரிவு அல்லது கிளை என்று பொருள் ஆகும். ஆக விசாகம் என்றால் புதிய பிரிவு என்று பொருள்.

வானத்தை நம் முன்னோர்கள் இரு பெரும் பிரிவுகளாகப் பிரித்தனர். இதன்படி வான கோளத்தில் தென் கோளப் பகுதி வட கோளப் பகுதி  என இரண்டு கோளப் பகுதிகள் உள்ளன.வடக்கு மண்டலம் அல்லது கோளத்தைப் பிரிக்கும் நட்சத்திரமாக விசாகம் அமைகிறது. அதாவது புதிய பிரிவின் ஆரம்ப நட்சத்திரம் அது! இந்த ஆரம்பத்தைப் பிரிக்கும் ராசியாக துலா ராசி அமைகிறது.மேஷம், ரிஷபம், மிதுனம்,
கடகம்,சிம்மம், கன்னி ஆகிய ஆறு ராசிகளும் ஒரு பகுதியாக இருக்க துலாத்திலிருந்து அடுத்த மண்டலம் ஆரம்பிக்கிறது!


இன்னொரு முக்கியமான அறிவியல் விஷயம், துலாத்தில் சூரியன் இணையும் போது இரவும் பகலும் சம அளவு என்று ஆகிறது. இரவையும் பகலையும் சமமாகக் காட்டும் தராசு (பாலன்ஸ்) துலாம் தான். அத்துடன், கோடை காலத்தையும் குளிர் காலத்தையும் பிரித்து பருவத்தை சமமாக்கும் மாதம் வைகாசி. விசாக நட்சத்திரத்தில் வரும் பௌர்ணமியை ஒட்டி அந்த மாதத்திற்கு வைகாசி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. விசாக நட்சத்திரம் வட்ட வடிவமாக தராசு போல உள்ள ஒரு நட்சத்திரம் என்பது இன்னொரு வியப்பூட்டும் சுவையான செய்தி!

ஆக வான மண்டலத்தை இரு பிரிவுகளாகப் பிரிப்பது விசாகம். இரவும் பகலையும் சமமாகப் பிரிப்பதும் விசாகம். கோடை காலம் குளிர்காலம் என பருவத்தை இரண்டாகப் பிரிப்பதும் விசாகம். இத்தனை விஷயங்களை சமன் செய்யும் இது இருக்கும் ராசி துலா ராசி என்பது பொருத்தம் தானே! நம் முன்னோர்களின் அறிவியல், ஆன்மீக, வானவியல், ஜோதிட அறிவை எண்ணி வியந்து வியந்து பிரமிக்கலாம்!
தென் மண்டலத்தை உருவாக்கிய விஸ்வாமித்திரர் 
பொய்யே உரைக்காத வால்மீகி முனிவர் ராமாயணத்தில் பால காண்டத்தில் 60ம் ஸர்க்கத்தில் விஸ்வாமித்திரர் திரிசங்குவிற்காகப்  படைத்த தென் மண்டலத்தைப் பற்றி மிக விரிவாக எடுத்துரைக்கிறார். வானில் சென்ற திரிசங்குவை இந்திரன் தடுக்க அவன் ‘த்ராஹி த்ராஹி’ (காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்) என்று விஸ்வாமித்திரரிடம் அபயம் கேட்டுக் கீழே விழ விஸ்வாமித்ரர் திஷ்ட திஷ்ட (இரு இரு) என்று சொல்லி அவனை நிறுத்தி ஒரு புதிய மண்டலத்தையே ச்ருஷ்டிக்கிறார்.
ச்ருஜன் தக்ஷ¢ண மார்கஸ்தான் சப்தரிஷீன் அபரான் புன: I                         
நக்ஷத்ர வம்சபரம்பரம் அச்ருஜத் க்ரோத மூர்ச்சித: II (பால காண்டம் 60ம் ஸர்க்கம்,ஸ்லோகம் 20)
“பிராஜாபதியைப் போலவே விஸ்வாமித்ரர் தெற்கில் சப்தரிஷி மண்டலத்தை உருவாக்கினார். அதே போல தெற்கில் வடக்கில் இருப்பது போல நட்சத்திரங்களையும் உருவாக்கினார்.”
வானத்தில் தேவ பாகத்திலும் அசுர பாகத்திலும் உள்ள நட்சத்திரங்களை ஒப்பு நோக்கினால் நாம் வியப்பை அடைவோம். வடக்கே உள்ள (சௌம்ய) துருவ நட்சத்திரம் போல தெற்கே யம துருவம் உள்ளது. மயில் வடிவம் போல உள்ள சப்தரிஷி மண்டலம் வட பாகத்தில் இருக்கும் போது மயூர மண்டலம் என்ற சப்தரிஷி மண்டலம் தெற்கே உள்ளது. மான் தலை உள்ள ஓரியன் வடக்கில் உள்ள போது அதே மான் தலை போல உள்ள நட்சத்திரம் உடைய மகரம் தென் மண்டலத்தில் உள்ளது.ஆருத்ரா வடக்கில் இருப்பது போல விசாகம் தெற்கில் உள்ளது. வடக்கின் ரோஹிணி போல தெற்கில் ஜேஷ்டா (கேட்டை) உள்ளது. வடக்கில் உள்ளஅஸ்வினி இரட்டையர் போல இரட்டையரான விசித்ரதுவை தெற்கில் காணலாம்.
இப்படி மிக முக்கியமான பிரிவைச் சுட்டிக் காட்டும் ஒரு நட்சத்திரமாக விசாகம் திகழ்கிறது!
அக்னியும் இந்திரனும் அதி தேவதைகள் 
இனி விசாகத்துடன் தொடர்புடைய ஏராளமான புராணக் கதைகளில் சிலவற்றைப் பார்ப்போம். விசாக நட்சத்திரத்தின் அதி தேவதைகள் அக்னியும் இந்திரனும் ஆவர். மஹாபாரதத்தில் மார்க்கண்டேயர் பஞ்ச பாண்டவர்களுக்கு (வன பர்வம் 200வது அத்தியாயம்) ஒரு அற்புதமான கதையைக் கூறுகிறார். அது சிபி சக்கரவர்த்தியின் சரித்திரம். உசீனர தேசத்தை ஆண்டு வந்த சிபி சக்கரவர்த்தியின் மடியில் ஒரு நாள் திடீரென்று புறா ஒன்று வந்து விழுந்தது.”அடைக்கலம். ராஜாவே, அடைக்கலம். என்னைக் காப்பாறுங்கள்” என்று சரணடைந்தது. அதைத் துரத்தி வந்த கழுகு சிபியிடம் வந்து, “அரசே! நான் துரத்தி வந்த இரை அது. அதை எனக்கு விட்டு விடுங்கள்” என்று கேட்டுக் கொண்டது. சிபி தர்மசங்கடத்தில் மாட்டிக் கொண்டார். கழுகிடம் புறாவை விட்டு விடுமாறு வேண்டினார். “:எடைக்கு எடை உன் சதையைத் தருவதானால் நான் புறாவை விட்டு விடுகிறேன்” என்று கழுகு கூறியது.மகிழ்ச்சியுடன் அதற்கு இணங்கிய சிபி தன் ஒரு பக்கத்துத் தொடையை அறுத்து  பெரிய தராசின் ஒரு பக்கத்தில் வைத்து மறு பக்கத்தில் புறாவை வைத்தார்.புறாவின் எடை கூட இருந்தது. தயங்காமல் தன் மறு பக்கத் தொடையையும் அறுத்து தராசில் சிபி வைத்தார்.இன்னும் புறாவின் எடை கூடவே இருந்தது.சிபி தானே ஏறி தராசில் நின்றார்.அவரது இந்தத் தியாகம் உலகையே பிரமிக்க வைத்தது! அவரது தியாகத்தைக் கண்டு வியந்த புறா, “நானே அக்னி!கழுகாக வந்தது இந்திரன்!வாழ்க உன் பெருமை” என்று கூறி வாழ்த்தியது. இந்திராக்னி தராசில் வைத்து நிறுத்திய மன்னன் உலக மக்களின் மனத் தராசில் அதிக எடையைப் பெற்றுக் காலம் காலமாகப் புகழப் படுகிறான்.
தராசில் நிறுத்தல், விசாக நட்சத்திரத்தின் அதி தேவதைகளான இந்திரன், அக்னியால் சோதிக்கப்படுதல் என்ற இந்தச் சம்பவம் துலா தராசியின் சின்னமான தராசையும் துலா ராசியில் உள்ள விசாக நட்சத்திரத்தையும் நினைவு படுத்துகிறது.விசாக நட்சத்திரத்தின் அதி தேவதைகளான இந்திரனும் அக்னியும் கழுகாகவும் புறாவாகவும் சிபியை தராசில் சோதிக்கும் போது நீதியின் கோட்பாடுகள் பிரித்துணரப்படுகிறது!பல தொடர்புகளை சங்கிலி போலப் பிணைக்கும் விசாகம் நம்மை சிந்திக்க வைக்கிறது.
முருகனின் பெருமை
இன்னொரு கதையையும் இங்கு பார்க்கலாம்.ஒரு முறை அக்னி, கங்கை, சிவன், பார்வதி ஆகிய நால்வருமே முருகன் மீது உரிமை கொண்டாட சிவன், “குழந்தை யாரை முதலில் பார்க்கிறான் என்று பார்ப்போம்” என்றார். கார்த்திகை மாதர் மடியிலே இருந்த முருகனோ வந்த நால்வரின் உளக் கருத்தையும் நன்கு அறிந்து கொண்டு புன்முறுவல் பூத்தார். தன்னை நான்கு உருவங்களாக ஆக்கிக் கொண்டார். குமரன், விசாகன்,சாகா,நைகமேயன் என்ற அந்த நால்வருள் குமரன் சிவனிடமும், விசாகன் பார்வதியிடமும்,சாகா கங்கையிடமும்,நைகமேயன் அக்னியிடமும் விரையவே அனைவருமே மன மகிழ்ந்தனர். “பல்வேறு பெயர்களுடன் திகழ்ந்து நீ அனைவருக்கும் அருள் பாலிப்பாயாக”, என்று சிவன் வாழ்த்துவதாகக் கதை முடிகிறது. இப்படி விசாக நட்சத்திரத்திற்கும் முருகனுக்கும் உள்ள தொடர்பைப் பற்றி எழுத தனி நூலே வேண்டும்!
ராதையின் அற்புத வான நடனம்
அடுத்து ராதா என்ற பெயருடைய இந்த நட்சத்திரம் பற்றிப் பல நிகழ்வுகள் உண்டு. ராதை கிருஷ்ணனுடன் ஆடும் நடனம் காலம் காலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அறிவியல் விஞ்ஞானிகளாலும் கூட வானில் ஆடும் ராதையின் நடனம் கொண்டாடப்படுகிறது; பெரிதும் வியக்கப்படுகிறது! ஆகாயத்தில் பால்வீதி மண்டலத்தில் கண் சிமிட்டி நடனமாடும் லட்சக்கணக்கான  நட்சத்திரங்களையும் , கிருஷ்ண-ராதா நட்சத்திரங்களையும் வானவியல் அறிஞர்களும் மஹா கவிகளும் வியந்து புகழ்ந்து பாடியுள்ளனர். மில்கி வே என்ற பால்வீதி மண்டலத்தில், ஒளி வெள்ளத்தில் மிதக்கும் தாரகைகள் பளிச்சிடும் வான வீதியில், நிகழும் நட்சத்திர நடனம் தங்களின் வர்ணனைக்கு அப்பாற்பட்ட பேரொளி என்று தங்கள் தோல்வியை அவர்கள் மனமார ஒப்புக் கொண்டுள்ளனர். இந்த நூற்றுக் கணக்கான அற்புத கவிதைகளில்  கண்ணனையே ரசித்து அவனையே அனுபவித்து அவனிலேயே உயிர் வாழ்ந்த லீலாசுகரின் கிருஷ்ணகர்ணாம்ருத (3-2) பாடல் ஒன்றை மட்டும் (பதங்கள் சுலபமாக அர்த்தத்தைப் புரிந்து கொள்வதற்காகப் பிரித்துத் தரப்பட்டுள்ளது) மாதிரிக்காக இங்கு பார்த்து மகிழ்வோம்:
ராதா ஆராதித விப்ரம அத்புத ரஸம் லாவண்ய ரத்னாகரம்                   
 ஸாதாரண்ய பத வ்யதீத ஸஹஜ ஸ்மேர ஆனன  அம்போருஹம் I                ஆலம்பே ஹரி நீல கர்வ குருதா ஸர்வஸ்வ நிர்வாபணம்                          
 பாலம் வைணவிகம் விமுக்த மதுரம் மூர்த்தாபிஷிக்தம் மஹII
“ராதையினால் போற்றப்பட்ட ஆச்சரியமான சிருங்கார ரஸத்தை உடையதும் அழகின் கடல் போன்றதும் சாதாரண நிலையைக் கடந்து இயற்கையாகவே புன்முறுவல் பூத்த முகமாகிய தாமரை உடையதும் இந்த்ர நீலமணியின் பெருமையையும் கர்வத்தையும் தனது காந்தியால் அழிப்பதும் குழலுடன் கூடியதும் ஒப்புயர்வற்ற அழகினால் மனதிற்கு இனியதும் தலை சிறந்ததும் குழந்தை வடிவானதும் ஆகிய பேரொளியை வழிபடுகின்றேன்” என்பது இதன் பொருள்.
ராதை என்றாலேயே மகிழ்ச்சி என்று பொருள்!
இனி உலக நாகரிகங்களெல்லாம் வியக்கும் நட்சத்திரமாகவும் இது விளங்குகிறது. துலாம் என்ற வார்த்தையின் திரிபான துல்கு என்ற வார்த்தையால் தங்களின் ஏழாவது மாதத்தைப் பெயரிட்டு அசிரியர்களும்  அகடியர்களும் இதைக் கொண்டாடி வந்தது  குறிப்பிடத்தகுந்தது. ஆல்பா, பீடா லிப்ரா எனப்படும் இரு நட்சத்திரங்களே அறிவியல் குறிப்பிடும் இரு துலா ராசி நட்சத்திரங்கள். மூன்றாம் மாக்னிட்யூட் நட்சத்திரங்கள் இவை.வேதங்களின் கூற்றுப்படியும் விசாகம் இரண்டு நட்சத்திரங்களைக் கொண்டதாகும்.ஸ்வாதியின் கிழக்கில் அமைந்துள்ளதாக இதை நமது நூல்கள் தெளிவாகக் குறிப்பிடுகின்றன.
ராதா அல்லது விசாகம் கவட்டை போன்ற அல்லது செடி அல்லது மரக்கிளை போன்ற அமைப்பைக் கொண்டது. இது தோரணம் போன்ற அமைப்பை உடைய நான்கு நட்சத்திரங்கள் என்றும் சிலர் கூறுவர். இந்த நான்குமே ஒரு தராசைச் சுட்டிக் காட்டுவதாக அவர்கள் கூறி மகிழ்வர்.ராதை என்ற சொல்லுக்கே மலர்ச்சி, மகிழ்ச்சி,வெற்றி ஆகிய அர்த்தங்கள் உண்டு. சக்தி,வலிமை,முயற்சியின் அடிப்படையிலான வெற்றி, பொறுமை, விடாமுயற்சி, உறுதி ஆகிய அருங்குணங்களைத் தன்னுடையதாக அறிவிக்கும் அற்புத நட்சத்திரம் விசாகம்.
தமிழ் முருகனும், புத்தரும்
தமிழ் முருகன் அவதரித்த நட்சத்திரம் இது. மனித குலத்திற்கே புத்தொளி காட்டிய புத்தர் வைகாசி பௌர்ணமியிலேயே அவதரித்தார். அதே பௌர்ணமியிலே ஞானம் பெற்றார்.அதே வைகாசி பௌர்ணமியிலேயே முக்தி அடைந்தார்.கிறிஸ்தவர்களோ ஏசுவின் பன்னிரெண்டு சீடர்களில் ஒருவரான திருத்தூதர் பிலிப்புடன் இந்த நட்சத்திரத்தைத் தொடர்பு படுத்தி மகிழ்கின்றனர்!
வானில் மட்டும் (பாலன்ஸை) நடுநிலையுடன் சீராக சமமாகக் காண்பிக்கும் நட்சத்திரம் இல்லை விசாகம்; வாழ்க்கையிலும் சமச்சீராக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஒரு புதிய பாதையின் ஆரம்பத்தைக் காட்டும் நட்சத்திரம் இது!
நன்றி திரு.ச.நாகராஜன் அவர்களுக்கு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக