Vedic Jothidam

திங்கள், 25 ஜூலை, 2016

மாங்கல்ய தோஷம்

ஜாதகங்களில் திருமணமே ஆகாது என்ற அமைப்புடைய ஜாதகங்கள் உள்ளன.  ஆனால் மாங்கல்ய தோஷம் என்பது அவ்வாறு இல்லை, இந்த தோஷம் நிரந்தரமாக திருமணத்தை தடை செய்துவிடாது.

ஒரு பெண்ணின் ஜனன ஜாதகத்தில் 8ம் வீடு மாங்கல்ய ஸ்தானமாகும். 8ம் வீட்டதிபதி ஆட்சி உச்சம் பெற்றாலும், 8ல் சுபகிரகங்கள் அமையப் பெற்றாலும், 8ம் வீட்டை சுபகிரகங்கள் பார்வை செய்தாலும் நீண்ட மாங்கல்ய பாக்கியம் உண்டாகி, கணவரின் ஆயுளை அதிகரிக்கச் செய்யும். ஒரு ஆணுக்கு ஆயுள் பாவம் பலமிழந்திருந்தால் மாங்கல்ய பலம் கொண்ட பெண்ணை திருமணம் செய்து வைப்பது நல்லது.

அதுவே பெண் ஜாதகத்தில் 8ம் வீட்டில் சனி, செவ்வாய், சூரியன், ராகு, கேது போன்ற பாவிகள் அமையப் பெற்றாலும், சனி, செவ்வாய் போன்ற பாவிகள் பார்வை செய்தாலும் கடுமையான மாங்கல்ய தோஷம் உண்டாகும். இதனால் இளம் வயதிலேயே வாழ்க்கை துணையை இழக்கக் கூடிய அவலநிலை ஏற்படும். இப்படி மாங்கல்ய பாவம் பலமிழந்த பெண்ணிற்கு நல்ல ஆயுள் பலம் கொண்ட வரனாக பார்த்து திருமணம் செய்து வைத்தால்தான் தீர்க்க சுமங்கலியாக வாழக்கூடிய பாக்கியம் உண்டாகும். எனவே, பொருத்தம் பார்க்கும் போது 8ம் வீட்டையும் இருவரின் ஜாதக ரீதியாக பாப / தோஷ சாம்ய விதிமுறைப்படி பொருத்த நிர்ணயம் செய்யும் ஜோதிடர் மூலம் ஆராய்ந்து பார்ப்பது மிகுந்த பயனளிக்கும்.

எட்டாமிடத்தில் தோஷமுடைய செவ்வாய் பகவானை பிரஹஸ்பதி (குரு பகவான்) பார்க்க இந்த தோஷம் நீங்கி விடும் என்பது ஜோதிட விதிகளில் கூறப்படுகிறது.


மாங்கல்ய தோஷம் நீங்க வயதான சுமங்கலிகளுக்கு முருகன் சன்னிதியில் மஞ்சள் குங்குமம் வெற்றிலை பாக்கு கண்ணாடி சீப்பு மற்றும் தங்கள் தகுதிக்கேற்ப தட்சணை ஆகியவற்றை கொடுத்து அவர்களை வீட்டிற்கு அழைத்து உணவளித்து அவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கிட தோஷம் தீரும் என்று ப்ருகு நந்தி நாடி என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக